×

கொரில்லாவுக்கு கொரோனா வருமா?

*மனிதரிடமிருந்து சில நோய்கள் கொரில்லா குரங்குகளுக்கு எளிதாகத் தொற்றும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஃப்ளூ சளி, காய்ச்சல் அதில் முக்கியமானது. கொரில்லாவுக்கும் கொரோனா வருமா என்று கேட்டால் வர வாய்ப்புண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

*தீக்கோழிகளால் குதிரையைவிட வேகமாக ஓட முடியும் என்கிறார்கள். ஆண் தீக்கோழிகள் சிங்கத்தைவிட கொடூரமாக உறுமுமாம்.

*ஓர் ஆரோக்கியமான சிங்கம் தன் வாழ்நாளில் சராசரியாக இருபது உயிர்களை மட்டுமே கொன்று தின்கிறதாம். அதிலும் தொண்ணுற்று ஐந்து சதவீதம் வேட்டையைச் செய்வது பெண் சிங்கங்கள்தான்.

*யார்க்‌ஷயர் டெரியர் என்ற நாய்தான் உலகின் மிகச் சிறிய நாய் என்கிறார்கள். இதன் எடை அதிகபட்சமாக மூன்று கிலோதான்.

*உலகில் உள்ள பன்றிகளில் பாதிக்கு மேல் சீனாவில்தான் வளர்க்கப்படுகின்றன. நம் ஊரில் மாட்டுப் பண்ணை அமைப்பது போல் அங்கு பன்றிப் பண்ணைகள் சகஜம்.

*மான்களுக்குப் பித்தப்பை கிடையாது. அவை உருவான நாள்தொட்டே சைவம் உண்ணிகள். பித்தப்பை என்பது கொழுப்பைச் செரிக்க அமிலம் சுரக்கும் பை என்பதால் மான்களுக்கு அவை இல்லை.

*வவ்வால்களுக்கு கால் எலும்புகள் வலுவற்று இருக்கும். சுமார் ஆயிரத்து இருநூறு வகையான வவ்வால்களில் இரண்டே இரண்டு வகைகளால்தான் நடக்க இயலுமாம்.

*குயில் உற்சாகமாக இருந்தால் ஒரு நாளில் முந்நூறு பாடல்கள் பாடுமாம்.

*மனித குலத்தைத் தவிர மெனோபாஸ் எனும் மாதாந்திர விலக்கு நிற்றல் நிகழும் இரு முதுகெலும்புள்ள பிராணிகள் யானை மற்றும் திமிலங்கம்.

*உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பத்து லட்சம் எறும்புகள் என்ற விகிதத்தில் எறும்புகளின் எண்ணிக்கை உள்ளது.

*பசுக்களால் நின்றுகொண்டே உறங்க இயலும். ஆனால் அவை கனவு காண வேண்டுமானால் படுக்க வேண்டும்.

*இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கர்கள் சிலவகை வெளவால்களுக்கு குண்டுகளை தூக்கிக்கொண்டு போய் போடும் பயிற்சியை அளித்தார்களாம்.

*நாய்களிடம் செய்கைகள், பாவனைகள் மூலம் பேசுவதைவிட சொற்களாக உத்திரவிட்டால் அவை விரைவில் கற்றுக்கொள்ளுமாம்.

*ஆந்தைகள் கூட்டத்தை ஆங்கிலத்தில் பார்லிமெண்ட் என்கிறார்கள்.

*ஒரு மரங்கொத்தி ஒரு விநாடிக்குள் இருபது முறை கொத்தும் திறனுடையது.

Tags : Gorilla
× RELATED சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு